Monday, March 28, 2011

ஆஸி.யை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா-அரையிறுதியில் பாக்.குடன் மோதல்......

அகமதாபாத்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை அது மொஹாலியில் சந்திக்கவுள்ளது.
பெரும் பரபரப்புக்கு மத்தியி்ல் மோத்திரா மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பான்டிங் 104 ரன்கள் எடுத்தார். ஹாடின் 53 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹஸ்ஸி 38 ரன்களைக் குவித்தார்.
இதியத் தரப்பில் அஷ்வின், யுவராஜ் சிங், ஜாகிர் கான் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.


இதன் பின்னர் இந்தியா ஆட வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக்கும், சச்சினும் சிறப்பான தொடக்கத்தை நோக்கி அணியை இட்டுச் சென்றனர். அதிரடியாக ஆடிய இருவரும் வேகமாக ரன்களைக் குவிக்க எத்தனித்தனர். ஆனால் இதில் ஷேவாக் வாட்சன் பந்தில் ஆட்டமிழந்து 15 ரன்களுடன் வெளியேறினார்.

சச்சின் உலக சாதனை:
அதேசமயம், சச்சின் தனது வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு ஆடி அரை சதம் போட்டார். நேற்றைய ஆட்டத்தில் சச்சின் புதிய உலக சாதனையையும்

படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் 18,000 ரன்களைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார் சச்சின். நேற்று அவர் போட்ட அரை சதம், அவருக்கு 94வது அரை சதமாகும்.

இறுதியில் 53 ரன்கள் எடுத்த நிலையில் சச்சின் ஆட்டமிழந்தார். இதையடுத்து கெளதம் கம்பீர் விராத் கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடிய 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி தன் பங்குக்கு 24 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

ஆனால் யுவராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்த பிறகுதான் ஆட்டத்தில் களை கட்டியது. இருவரும் பிரமாதமாக ஆடினர். குறிப்பாக யுவராஜ் சிங் ஆட்டத்தை அழகாக கொண்டு சென்றார். அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும், தேவையில்லாததை தடுத்தும் ஆட்டத்தை லாவகமாக கையாண்டார்.

இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்க வைக்க பான்டிங் கடுமையாக முயன்று பார்த்தார். ஆனாலும் முடியவில்லை.

கடைசி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். யுவராஜ் சிங் 57 ரன்களும், ரெய்னா 34 ரன்களும் எடுத்தனர்.

47.4 வது ஓவரிலேயே இந்தியா 5 விக்கெட்களை மட்டும் இழந்து 261 ரன்களை எடுத்து அரை இறுதிக்குள் நுழைந்தது.

2 விக்கெட்களை வீழ்த்தியதோடு, 57 ரன்களையும் குவித்து, வெற்றிக்கு வித்திட்ட யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முக்கிய அம்சங்கள்:

நேற்றைய போட்டியில் சச்சின் மட்டும் சாதனை படைக்கவில்லை. மாறாக யுவராஜ் சிங்குக்கும் நேற்றைய தினம் முக்கியமானதாக அமைந்தது.

யுவராஜ் சிங் நேற்று தனது 25வது மேன் ஆப் தி மேட்ச் பரிசை வாங்கினார். அதேபோல நேற்று ஒரு நாள் போட்டிகளில் 8000 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

ஆஸி. ஆதிக்கம் சிதைந்தது:

கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாதான் சாம்பியன் பட்டத்தை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்து வந்தது. தற்போது அதை இந்தியா முறியடித்துள்ளது.

மேலும் 2003ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவை, ஆஸ்திரேலியா மிகப் பெரிய அளவில் தோற்கடித்ததற்கும் தற்போது இந்தியா பழி தீர்த்து விட்டது.

அடுத்தது பாகிஸ்தான்!

இந்தியா தனது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது.

இதனால் உலகக் கோப்பைப் போட்டிக் களம் படு சூடாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களைப் பொறுத்தவரை இதுதான் அவர்களுக்கு இறுதிப் போட்டி போல என்பதால், இந்தப் போட்டி விறுவிறுப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது சிறந்த பார்மில் இருக்கும் யுவராஜ் சிங்கின் சொந்த மண்ணில் போட்டி நடைபெறவிருப்பதால் இந்திய அணியும், ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

1 comments:

Unknown said...

All the best indian team "ONE MAN ARMY DHONI"

Post a Comment