Friday, April 22, 2011

காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலட்சியப்போக்கு......





காயல்பட்டினம் பெரிய தெருவில் செயல்பட்டு வருகிறது ஐ.ஓ.பி. என்று சுருக்கியழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையிலும், சனிக்கிழமை மட்டும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும் வேலை நேரம் என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும் வங்கி வளாகத்திலுள்ள பலகை தெரிவிக்கிறது. இது இப்படியிருக்க, வேலை நேரங்கள் முறையாக பேணப்படுவதில்லை... மதிய உணவு இடைவேளை என்று தம் விருப்பத்திற்கேற்ப ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்... அவசியமற்ற காரணங்களைக் கூறி வங்கி மேலாளர் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்... மணிக்கணக்கில் காத்திருந்தாலும் அசட்டையாகவே அலுவலர்கள் பணி செய்கின்றனர்... காத்திருப்பு குறித்து முறையிட்டாலும் வேண்டுமென்றே கண்டுகொள்வதில்லை... பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தும், பெண்களை ஆண்கள் பகுதிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தல்... இவை காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்கள் மீது வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். இந்நிலையில், இன்று மதியம் 02.30 மணிக்கு இவ்வங்கிக்கு ஏ.கே.இம்ரான் என்ற வாடிக்கையாளர் பணம் அனுப்புவதற்காக சென்றிருக்கிறார். பணம் செலுத்தும் பகுதி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அங்கிருந்த அலுவலரிடம் அவர் வினவியபோது, இது மதிய உணவு இடைவேளை நேரம்... 03.00 மணிக்குத்தான் திறக்கப்படும் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே, வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறை சம்பந்தமாக இவ்வங்கியின் மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளதைக் கருத்தில் கொண்டு நமக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக்கு உடனடியாக விரைந்தோம். இதனிடையே, வேலைநேரம் அறிவிக்கப்பட்ட பலகையைப் பார்வையிட்ட அந்த வாடிக்கையாளர், “மதிய உணவு இடைவேளை என்று எந்த அறிவிப்பும் இல்லையே...?” எனக் கேட்டதற்கு, “நாளைக்கு எழுதுவோம்...” என்று அங்கிருந்த அலுவலர் அசட்டையாக விடையளித்தனர். இதுகுறித்து முறையிடுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவதற்காக அங்கு நிறுவப்பட்டிருந்த பல்வேறு அறிவிப்புப் பலகைகளைப் பார்வையிட்டபோது, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளடங்கிய அறிவிப்புப் பலகையை மறைத்து வங்கியின் வட்டிக்கடன் குறித்த அறிவிப்படங்கிய பதாகை தொங்க விடப்பட்டிருந்தது. அதனை ஒதுக்கிவிட்டு நாம் படமெடுக்க முனைந்தபோது, “அலாரத்தை அழுத்திவிடுவேன்... தலைமை அலுவலகத்திற்கு கம்ப்ளெய்ண்ட் வெச்சிறுவேன்...” என அங்கிருந்த அலுவலர்கள் மிரட்டுமுகமாகக் கூறினர். உடனடியாக, இவ்வங்கியின் மீதான குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதற்கான 1800 425 4445 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்புகொண்டு, வங்கியின் வேலை நேரம் குறித்து வினவியபோது, “மதியம் 01.30 மணி முதல் 02.00 மணி வரை மட்டுமே மதிய உணவுக்கான இடைவேளை...” என்று தெரிவிக்கப்பட்டது. “தற்சமயம் மணி 02.35... இங்கிருக்கும் அலுவலர்கள் 03.00 மணிக்குத்தான் திறப்போம் என்று தெரிவிக்கின்றனர்...” என்று நாம் தெரிவிக்கவும், அலுவலரிடம் அதே தொலைபேசி அழைப்பில் பேசி விபரம் கேட்டனர். “இல்லே சார்... மதிய உணவு இடைவேளை நேரம் எழுதப்படலையே...ன்னு கேட்டாங்க... நாளைக்கு எழுதிடறோம்...ன்னு சொன்னோம் சார்...” என்றார். தொலைபேசியைக் கையில் பெற்றுக்கொண்ட நாம், “பிரச்சினை அதுவல்ல! இப்போது மணி 02.40... இன்னும் அவர்கள் திறக்கவேயில்லை...” என்று மீண்டும் தெரிவித்தோம். சென்னையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் அலுவலக எண்களான +91 44 28519568 அல்லது +91 44 28589718 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அங்கிருந்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு ஒருபுறம் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் அவசர அவசரமாக அனைத்துப் பிரிவுகளின் (கவுண்டர்) அடைப்புகளும் திறக்கப்பட்டன. பின்னர் அங்கு வந்த வங்கி மேலாளர் செல்வராஜனிடம், நடந்த பிரச்சினைகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்கையில், மதிய உணவு இடைவேளை 02.00 மணி முதல் 02.30 மணி வரைதான் என்றும், நாளைக்கே அதுபற்றிய அறிவிப்பு வங்கியில் தொங்கவிடப்படும்... நாங்களும் உங்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இருக்கிறோம்... சில நேரங்களில் எனது வேலைப்பளு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் வங்கியில் இருந்துவிட்டுதான் செல்கிறேன்... ஒரே நேரத்தில் பலரைக் கவனிக்க இயலாது என்பதால் எனது அறைக்கு ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்கிறேன்... என்றாலும், இந்த அறையில் ஆண்கள் பகுதிக்கு ஒரு வாசலும், பெண்கள் பகுதிக்கு ஒரு வாசலும் உள்ளதால் நான் ஆண் வாடிக்கையாளருக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண் வாடிக்கையாளரும், பெண் வாடிக்கையாளர் இருக்கும்போதே ஆண் வாடிக்கையாளரும் அவரவர் பகுதி வாசல்கள் வழியாக நுழைந்துவிடுகின்றனர்... என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நான் சட்டம் பேசினால் அவர்கள் கூடுதலாக உரிமை எடுக்கின்றனர்... விபரமறிந்த ஒரு சிலர் மட்டுமே ஒத்துழைக்கின்றனர்... ஒரே நேரத்தில் பலரை சமாளிப்பது உங்களுக்கும் திருப்தியளிக்காது... எனக்கும் முடியாததுதானே...? பெண் வாடிக்கையாளர்கள் யாரையுமே நாங்கள் ஆண்கள் பகுதிக்கு வரச் சொல்லவில்லை... என்றார். பின்னர் கருத்து தெரிவித்த நாம், வேலை நேரம் அறிவிக்கப்பட்ட பலகையிலேயே மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தையும் தெளிவாக அறிவிக்குமாறும், வங்கி அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான முறைமைகள் அடங்கிய அறிவிப்புப் பலகையை மறைக்கும் விதமாக எதையும் தொங்க விட வேண்டாமென்றும், மேலாளரைச் சந்திப்பதற்கான முறைமைகள் குறித்தும் இருபக்கமும் அறிவிப்பு தொங்க விடுமாறு கேட்டுக்கொள்ள, அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக ஆவன செய்வதாகத் தெரிவித்தார். அதனையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

0 comments:

Post a Comment